இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, September 14

தயாரிப்பாளர் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் . போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு

கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக நேற்று போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் நேற்று மாலை ஏராளமான சினிமா தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்பட சிலர் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த மே மாதம் 13-ந் தேதி அன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம.நாராயணன், பொதுச்செயலாளர் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கள். துணைத்தலைவர்களாக இருந்த நானும், அன்பாலயா பிரபாகரனும் பதவி விலகினோம்.

பின்னர் அனைவரது ஆதரவோடும் நான் பொறுப்பு தலைவராக பதவி ஏற்றேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றவுடன் சங்கத்தில் பல முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளதாக எனக்கு கடிதம் வாயிலாகவும், வேறு தகவல்கள் மூலமும் புகார்கள் வந்தன.

எனவே அதன் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்ட விரும்பினேன். கூட்ட முடியாமல் பல தடங்கல்கள் வந்தன. இறுதியாக 11-ந் தேதி அன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 230 பேர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நான் அவற்றை எழுத்து மூலமாக கொடுக்குமாறு கேட்டேன். அதன்படி எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளனர். 60 பேர் இந்த புகாரை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனு இப்போது போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்களையும், நகைச்சுவை காட்சிகளையும் ஒளிபரப்புவதில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

விண் மீடியா, ஜே.கே.மீடியா ஆகிய கேபிள் டி.வி. நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த கேபிள் டி.வி. நிறுவனங்களிடமிருந்து வசூலித்த தொகையில் ரூ.1.80 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த பணத்தை திரும்பவும் வசூலித்து தரும்படி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த தொகை கிடைத்தால் ஏழை-எளிய தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இதில் குற்றம்புரிந்தவர்கள் யார் என்பதை போலீசார்தான் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.

2007-லிருந்து 2010-ம் ஆண்டுவரை 4 ஒப்பந்தங்களை மாறி மாறி போட்டுள்ளனர். விண்மீடியா, ஜே.கே.மீடியா நிர்வாகிகளை அழைத்து விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்," என்றார்.

யார் குற்றவாளி?

உடனே ஒரு நிருபர், "தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினையை நீங்களே பேசி தீர்க்காமல் போலீஸ் வரை வந்து புகார் கொடுத்துள்ளீர்களே?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், "அதுதொடர்பாக பேசுவதற்கு அவர்கள் யாரும் வரவில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார்கள்," என்றார்.

"ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதா?", என்று கேட்கப்பட்டதற்கு, "யார் குற்றவாளி என்பதை போலீசார்தான் விசாரித்து முடிவு செய்யவேண்டும். இந்த மாதத்தோடு கேபிள் டி.வி. உரிமையாளர்களுக்கு வழங்கிய உரிமை முடிந்துவிட்டது. தற்போது கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனிமேல் ஒப்பந்தத்தை மீறி கேபிள் டி.வி.யில் சினிமா பாடல்களையோ, நகைச்சுவை காட்சிகளையோ ஒளிபரப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...